2023 (2024) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
அதன்படி, இந்த வாரத்திற்குள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முயற்சிக்கப்படும். இந்த வாரத்திற்குள் முடிக்க முடியாவிட்டால், இந்த வாரம் முடிவடைந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பின்னர் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சாதாரண தரப் பரீட்சை முடிந்து ஒன்றரை மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் முடிவுகளை வெளியிடுவதானது கல்வித்துறையின் வெற்றிகரமான மைல்கல்களில் ஒன்றாகும் என அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
இந்த ஆண்டில் 3527 மையங்களிலும் 535 ஒருங்கிணைப்பு மையங்களிலும் 33 வட்டார சேகரிப்பு மையங்களிலும் நடத்தப்பட்ட சாதாரண தரப் பரீட்சையில் 452,979 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.