கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூன் 24) தொடங்கிய இந்த போட்டித் தொடரானது ஜூலை 1ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
இந்த முறை போட்டிகளில் கொழும்பு தெற்கு, கொழும்பு வடக்கு, காலி, கண்டி மற்றும் தம்புள்ளை ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியிலும் தலா 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர், மேலும் ஒவ்வொரு அணிகளும் ஆரம்ப சுற்றில் 4 போட்டிகளில் விளையாடும். இதன் அடிப்படையில், புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஜூலை 1ஆம் தேதி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இம்முறை இளையோர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரில் சில தமிழ் பேசும் வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு வடக்கு அணியில் மொஹமட் முர்ஷாத், தம்புள்ளை அணியில் யாழ். மத்திய கல்லூரியின் தலைவரும் முன் வரிசை துடுப்பாட்ட வீரருமான நிஷாந்தன் அஜய், வேகப்பந்து வீச்சாளர் ரஞ்சித்குமார் நியூட்டன், சுழற்பந்து வீச்சாளர் யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் விக்னேஸ்வரன் ஆகாஷ் மற்றும் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர் சுதர்சன் சுபர்ணன் ஆகியோர் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.