ஆங்கில புள்ளியியல் நிபுணரும், டக்வொர்த் லுவிஸ் (DLS) முறையை உருவாக்கியவர்களில் ஒருவருமான ஃபிராங்க் டக்வொர்த் தனது 84 வயதில் காலமானார்.
ஃபிராங்க் டக்வொர்த் ஜூன் 21 அன்று உடல்நல பிரச்சினைகள் மற்றும் வயது மூப்பின் காரணமாக இறந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஃபிராங்க் டக்வொர்த் மற்றும் அவரது சக புள்ளியியல் நிபுணரான டோனி லுவிஸ் இணைந்து உருவாக்கிய டக்வொர்த் லுவிஸ் முறை, மழையால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் முடிவுகளைத் தீர்மானிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த முறை 1997 இல் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. 2001 இல், துண்டிக்கப்பட்ட விளையாட்டுகளில் திருத்தப்பட்ட இலக்குகளை நிர்ணயிக்க இதை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நிலையான முறையாக ஏற்றுக்கொண்டது.
டக்வொர்த் மற்றும் லுவிஸ் ஓய்வுக்கு பிறகு, இந்த முறை டக்வொர்த் – லுவிஸ் – ஸ்டெர்ன் முறை என பெயரிடப்பட்டது. அவுஸ்திரேலிய புள்ளிவிவர நிபுணர் ஸ்டீவன் ஸ்டெர்ன் இதில் சில மாற்றங்களைச் செய்தார்.
டக்வொர்த் மற்றும் லுவிஸ் இருவரும் ஜூன் 2010 இல் பிரித்தானிய பேரரசில் உறுப்பினர் பதவியைப் பெற்றனர்.
டக்வொர்த் லுவிஸ் முறை மிகுந்த சிக்கலான புள்ளியியல் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது. இது மீதமுள்ள விக்கெட்டுகள், இழந்த ஓவர்கள் போன்ற பல காரணிகளைப் பொருட்படுத்தி, இரண்டாவது துடுப்பாட்டம் செய்யும் அணிக்கு திருத்தப்பட்ட இலக்குகளை நிர்ணயிக்கிறது.