ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வஃபிக் சஃபாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா குழு செயற்பட்டுவரும் நிலையில் நேற்றைய தினம் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
பெய்ரூட்டில் நடந்த பேஜர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல், ஹிஸ்புல்லா மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
இந்த போர் காரணமாக சுமார் ஒரு லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில், இஸ்ரேல் தரைவழி தாக்குதலிலும் அதிரடியாக இறங்கியுள்ளது.
போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
நூற்றுக்கணக்கான குண்டுகள், ராக்கெட்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவரான வஃபிக் சஃபா, இஸ்ரேலுக்கு எதிராக முக்கிய திட்டங்களை வகுத்ததோடு, பிற நாடுகளை தொடர்பு கொண்டு, இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் கண்டறிந்த நிலையில், வஃபிக் சஃபாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
பெய்ரூட்டில் வஃபிக் சஃபா மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இஸ்ரேல் கடந்த இரவு முதல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில், வஃபிக் சஃபா உயிர்தப்பியதுடன், 22 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காசா மற்றும் லெபனான் மீது அப்பட்டமான மனித உரிமை மீறலை இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டதாகவும், அந்நாடு மனித குலத்திற்கு எதிரான போர் குற்றங்களை செய்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு (United Nations) குற்றம் சாட்டியுள்ளது.