இலங்கையின் சில்லறை சந்தையில் நாட்டு அரிசி, வெள்ளைப் பச்சரிசி மற்றும் சிவப்பரிசி ஆகிய மூன்று வகையான அரிசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேங்காய் மற்றும் முட்டையின் விலை அதிகரித்த பின்னணியில், இந்த மூன்று வகையான அரிசிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, நாட்டு அரிசிக்கு அதிக கேள்வி இருப்பதால் தட்டுப்பாடு அதிகமாக இருக்கின்றது, இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்நிலையில், மரதன்கடவல அரிசி வர்த்தகர்கள் சங்கத்தின் உறுப்பினர் எஸ். எஸ். ரணசிங்க கூறியதாவது, “எமது சங்கத்தினுள்ள வர்த்தகர்களிடம் தேவையான அளவு அரிசி இருப்பினும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கேற்ப அவற்றை விற்பனை செய்வது சாத்தியமில்லையென” தெரிவித்தார்.
ஆனால், விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.பி. குணரத்ன கூறியதாவது, “சந்தையில் காணப்படும் இந்த அரிசி தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவே தெரிகின்றது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் பெரிய அளவில் அரிசி விற்பனையில் ஈடுபடும் 05 முக்கிய வர்த்தகர்கள் இந்த பிரச்சினையை தீர்க்க கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.