கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பெயரை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு உத்தியோகபூர்வமற்ற முகநூல் பக்கத்தை பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அந்த முகநூல் பக்கத்தில், உரிமை கோரப்படாத பயணப் பொதிகள் விற்பனைக்கு உள்ளதாகவும், தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்தப் பக்கத்தில், பல பொருட்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் நிரப்பப்பட்ட பயணப் பொதி வெறும் 639 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் அதிகாரிகள் இதை முற்றிலும் தவறானதாக அறிவித்துள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் பயணப் பொதிகளை விற்பனை செய்யாது என்றும், பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, இந்த வகை மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.