பிரிக்ஸ் (BRICS) அமைப்புக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 16 ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்யாவின் காசான் பகுதியில் இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான இந்த மாநாடு இன்று (22.10.2024) மற்றும் நாளை நடைபெற உள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பு ஆண்டுதோறும் பிரிக்ஸ் மாநாட்டை நடத்துகிறது.
பிரதமர் மோடி, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அழைப்பை ஏற்று, 16-வது உச்சிமாநாட்டில் பங்கேற்க வருகை தருகிறார். இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்துவதே தனது பயணத்தின் முக்கிய நோக்கமென அவர் தெரிவித்தார். மேலும், பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.
பிரிக்ஸ் அமைப்புக்குள் உள்ள நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது. இந்த அமைப்பு, உலகளாவிய வளர்ச்சி, காலநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, நெகிழ்ச்சியான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல் மற்றும் கலாச்சாரத்தை விரிவுபடுத்துதல் போன்ற முக்கிய விஷயங்களில் கலந்துரையாடுவதற்கான தளமாக திகழ்கிறது. கடந்த ஆண்டு புதிய உறுப்பினர்களின் சேர்க்கை மூலம் பிரிக்ஸ் விரிவாக்கம், உலகளாவிய நன்மைக்கான உரையாடல்களை ஊக்குவித்துள்ளது.
இதற்கிடையில், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா காயம் காரணமாக இந்த மாநாட்டில் பங்கேற்கமாட்டார். அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.