ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தின் கதிரி நகரிலிருந்து கடப்பா மாவட்டம் புலிவேந்துலா நோக்கி பயணம் செய்த ஆந்திர அரசு பேருந்து, மழையால் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் இருந்த 25 பயணிகளும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து நடந்த போது, லேசான மழை பெய்து கொண்டிருந்தது. குப்பை மேடு பகுதி அருகே பேருந்து சென்றபோது, எதிரே வேகமாக வந்த லாரியுடன் மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பிரேக் போட்டார். ஆனால், பிரேக் பிடிக்காமல், பேருந்து சாலையின் இடப்புறத்தில் உள்ள மரத்தில் மோதி, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்தில் காயமடைந்த அனைவரும் புலிவேந்துலா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் இருவரின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளது. புலிவேந்துலா போலீஸார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.