மும்பையிலிருந்து கொழும்புக்கு வருகைதந்த விஸ்தாரா யு.கே 131 பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியதால், விமானம் முன்னதாகவே பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் (BIA) அவசரமாக தரையிறக்கப்பட்டது.
வியாழக்கிழமை (24) இந்தியாவின் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பி.ப 3.15 மணிக்கு கொழும்பில் தரையிறங்கவிருந்த விமானத்தில் இந்த தகவல் வந்ததும், விமானநிலைய நிர்வாகம் உடனடியாக அவசரநிலை பிரகடனம் செய்தது.
விமானத்தில் 107 பயணிகள், ஒரு குழந்தை, மற்றும் 8 விமானப் பணியாளர்கள் இருந்தனர். விமானம் பி.ப 2.55 மணிக்கு பண்டாரநாயக்க விமானநிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதுடன், சகல பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமான நிலைய பாதுகாப்பு மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் நிறுவனம் உட்பட அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும், அத்தகைய அவசர சந்தர்ப்பங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களைத் தொடர்ந்து செயல்பட்டனர்.
தற்போது, பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் விமானசேவைகள் வழமைக்கு திரும்பி, எவ்வித தடையுமின்றி செயல்பட்டு வருகின்றன.