இந்தியாவின் பெங்களூரு, கோரமங்கலம் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அடுத்த கட்டமான அரைஇறுதிக்கு நெருங்கியுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற போட்டியில், இலங்கை மலேசியாவுக்கு எதிராக 72-40 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு அருகே வந்துள்ளது. இலங்கை ஏற்கனவே பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா, இந்தியா, ஜப்பான் ஆகிய அணிகளை இலகுவாக வென்றிருந்தது.
மலேசியாவுக்கு எதிரான போட்டியில், முதல் பாதியில் இலங்கை 18-11 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் 22-11 என்ற கோல் வித்தியாசத்தில் விளையாடி இடைவேளையில் 40-22 என்ற முன்னிலை பெற்றது.
மூன்றாவது பாதியில், இரு அணிகளும் கடுமையாக மோதின. இதில் இலங்கை 16-13 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி நிமிடங்களில் இலங்கை சிறப்பாக விளையாடி 16-5 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், ஒட்டுமொத்தமாக 72-40 என்ற கோல் வித்தியாசத்தில் இலங்கை வெற்றியீட்டியது.
இலங்கை தனது கடைசி லீக் போட்டியில் மாலைதீவுகளை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த போட்டியில் பிரதான வீராங்கனைகளுக்கு ஓய்வு கொடுத்து, அரைஇறுதியில் அவர்களை முழு திறமையுடன் களம் இறக்க பயிற்றுநர் பி.டி. நாலிகா பிரசாதி திட்டமிட்டுள்ளார்.
அதேவேளை, மாலைதீவுகளுடனான போட்டியை இலகுவாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், மலேசியாவுடனான போட்டியில் இடம்பெற்ற 3ஆவது நேரப்பகுதியின் தவறுகளை ஆராய்ந்து, அடுத்த போட்டியில் நிச்சயமாக சவால்களைச் சமாளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.