யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சந்தியிலிருந்து எழுதுமட்டுவாழ் பிரதேசத்திற்கு செல்லும் வீதியில் உள்ள பிரதான பாலத்தை புனரமைக்கும் பணியை வட மாகாண ஆளுநர் வேதநாயகம் நேற்று (25) பிற்பகல் ஆரம்பித்தார்.
நாகர்கோவில் – எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் 1959ஆம் ஆண்டில் ஒரு நீர்ப்போக்கு பாலமாக கட்டப்பட்டது. இதனால், மாரிக்காலம் தொடங்கி சில மாதங்களாக இந்த பாலத்தில் நீர் நிரம்பி நிற்கிறது, எனவே இப்பாலம் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
அண்மையில், பல தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டும், வன ஜீவராசிகள் திணைக்களம் இந்த பாலத்தை அமைக்கத் தடையாக இருந்தது. இதனால், மூன்று ஆண்டுகளாக இப்பாலத்தின் புனரமைப்பு பணிகள் தடை செய்யப்பட்டன.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு. பிரபாகரமூர்த்தி மற்றும் நாகர்கோவில் மக்கள் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக, வன ஜீவராசிகள் திணைக்களம் இப்பாலத்தை புனரமைப்பதற்கு இணங்கியது.
புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர், கிராம சேவையாளர், துறைசார் அதிகாரிகள், மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பாலத்தை பயன்படுத்த முடியாததால், எழுதுமட்டுவாழ் சந்திக்கு செல்லும் மக்கள் 40 கிலோமீட்டர் தூரம் சுற்றி பயணிக்க வேண்டியுள்ளது.
இந்த புனரமைப்புப் பணியால் உள்ளூர் மக்களுக்கு மேலும் வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.